search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை போராட்டம்"

    • அடுத்தடுத்த நாட்களில் 2 பந்த் போராட்டங்களை புதுவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • நவராத்திரி விழா, தீபாவளி பண்டிகை ஆகியவற்றுக்கு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

    புதுச்சேரி:

    இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசிய தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து தமிழகம், புதுவையில் பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    அதேநேரத்தில் தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு ஆதரவாக திராவிடர் கழகம் உட்பட பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதுவையில் நேற்று முன்தினம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய மனு தர்ம சாஸ்திர நகல் எரிப்பு போராட்டத்தின்போது இந்து முன்னணி அமைப்பினருடன் மோதல் ஏற்பட்டது.

    இதில் இருதரப்பினரும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்த 42 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் தி.மு.க. எம்.பி. ராசாவை கண்டித்து புதுவையில் வருகிற 27-ந் தேதி செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம்(பந்த்) நடைபெறும் என இந்து முன்னணி நேற்று முன்தினம் அறிவித்தது. பல்வேறு சங்கங்களை சந்தித்து அவர்கள் ஆதரவும் திரட்டி வருகின்றனர்.

    இதனிடையே நேற்று பெரியார் இயக்கங்கள் மற்றும், அம்பேத்கர் இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சார்பில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம்(பந்த்) அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை ஏற்றம், புதுவைக்கு அரசு நிதி ஒதுக்கீட்டில் துரோகம், மின்துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அடுத்தடுத்த நாட்களில் 2 பந்த் போராட்டங்களை புதுவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நவராத்திரி விழா, தீபாவளி பண்டிகை ஆகியவற்றுக்கு வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் 2 நாட்கள் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது புதுவை வியாபாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    அதோடு புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவுவதால் கடந்த ஒரு வாரமாக அரசு, தனியார் பள்ளிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அப்போது காலாண்டு தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அறிவித்தபடி 2 நாட்கள் பந்த் நடந்தால் மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத செல்வதில் பாதிப்பு ஏற்படும் என மாணவர்களும், பெற்றோர்களும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

    ×